Skip to main content

தேவதைகள் - ஃப்ரம் ஸ்ரீரங்கம்




முன்னுரை:

 

                தலைப்பைப் பார்த்தவுடன் ஒருவேளை இது  ஆன்மீக ரீதியான புத்தகமாக இருக்குமோ என்று தோன்றியது. ஏனென்றால் ஸ்ரீரங்கம் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒரு பிரசித்த பெற்ற ஆன்மீகத் தளம். அதுமட்டுமின்றி இதே எழுத்தாளரான சுஜாதா அவர்கள் ஏற்கனவே ஆன்மீக புத்தகங்கள் மற்றும் புதினங்கள் எழுதியுள்ளார். ஆதலால் கூட எனக்கு அப்படித் தோன்றியிருக்கலாம். இப்புத்தகத்தில் உலாவி வரும் ஸ்ரீரங்கத்து தேவதைகள், ஆசிரியரின் கல்லூரி நாட்களில் அவருடன் பயணித்தவர் ஆவர். ஒரு சாதாரண மனிதனை எப்பொழுது தேவதை என்று குறிப்பிடலாம் என்ற கேள்விக்குத் தக்க பதிலை இந்த புத்தகம் அளிக்கின்றது. 

 

 

நன்றி மறப்பது நன்றன்று:

 

                பாப்ஜி - நான் படித்த முதல் கதை. இதில் பூவராகவன் என்ற கதாபாத்திரம் பாப்ஜி என்று அழைக்கப்படுகிறார். இவர் ஆசிரியரின் கல்லூரி நண்பரும் கூட. கல்லூரியில் படிக்கும்போது ஒரு சில குழப்பங்களால் தவறான அபிப்பிராயம் ஒரு பேராசிரியருக்கு பாப்ஜியின் மேல் வந்துவிடுகிறது. இதை எப்படி அந்த கதாபாத்திரம் கையாளுகிறார் என்பதும் கடைசியில் அந்தப் பேராசிரியரிடம் எப்படி நல்ல அபிப்ராயத்தைப் பெறுகிறார் என்றும் அதற்குக் காரணமானவரையும், பல வருடங்கள் கழித்தும் ஞாபகம் வைத்திருக்கும் ஒரு உன்னதமான கதாபாத்திரத்தை இந்த கதையின் மூலம் ஆசிரியர் நமக்குத் தெரியப்படுத்துகிறார். ஒழுக்கமான கடமை உணர்ச்சி மாறாத ஒரு மாணவனின் மேல் தவறுதலாக ஒரு பழி சுமத்தப்பட்டால் எப்படிப் பரிதவித்துப் போவான் என்பதைத் தெளிவாகச் சுட்டிக் காட்டியிருக்கிறார் ஆசிரியர். தனக்குத் தண்டனை கொடுத்த போதும் அந்த பேராசிரியரின் மீது துளியும் கோபமோ வருத்தமோ அல்லது வெறுப்போ கொள்ளாமல் அவரிடம் நற்பெயர் வாங்கத் துடிக்கும் ஒரு மென்மையான உள்ளம் கொண்ட மாணவனாக பாப்ஜி சித்தரிக்கப்படுகிறார். சிறிய விஷயங்களுக்குக் கூட பெரிதாகக் கோபப்படும் பேராசிரியரின் மனதைக் கதையின் கடைசியில் பாப்ஜி அறிந்த பின் நெகிழ்கிறார். தன்மீது கடுமையாக நடந்து கொண்டவர் முடிவில் தன் மீது காட்டும் சிறு பரிவினால், வாழ்நாள் முழுவதும் நன்றி மறவாது இருக்கும்படி செய்த செயல் மிகவும் ஆச்சரியத்திற்குரியது.

 

 

பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும்:

 

                திடீரென்று எங்காவது ஒரு பாம்பைப் பார்க்க நேரிட்டால் அது பாம்பு தான் என்று ஆராய்ச்சி செய்யும்முன் அவ்விடத்தை விட்டு ஓட்டம் காணவே நாம் துடிப்போம். உலகத்தில் உள்ள எல்லா வகை பாம்புகளும் விஷத் தன்மையைக் கொண்டவை அல்ல. சில பாம்புகள் மட்டுமே கொடியவை. இதை அறிந்தவர்கள், சில நாடுகளில் பாம்பைச் செல்லப்பிராணியாக வளர்ப்பதும் உண்டு. அடுத்த சுவாரசியமான கதை - பாம்பு. ஆம், இக்கதையின் கதாநாயகனை ஒரு சிறிய பாம்பு தான் கதாநாயகி நம் ஆசிரியரின் சகோதரியான வத்ஸலா அவர்கள். ஒரு சாதாரண மாலை நேரத்தில் நண்பருடன் வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கும் ஆசிரியரின் கண்களுக்கு ஒரு பாம்பு தென்படுகிறது. அதுவும் அவர் நண்பரின் மிதிவண்டியில். எதிர்பாராத நேரத்தில் ஒரு பாம்பைப் பார்த்த ஆசிரியரும் அவரது நண்பரும் என்ன செய்வது என்று தெரியாமல் திணறுகின்றனர். இதை அறிந்த வத்ஸலா துளியும் பயமின்றி அந்த பாம்பை லாகவமாகக் கையாளுகிறார். இந்த தைரியமான குணம் அவரின் அண்ணனுக்குக் கூட தெரியாது. அதே சமயம் பலர் ஒன்று கூடி அந்த பாம்பைக் கொல்ல முனைகின்றனர். இந்த வதையைத் தடுக்க வத்சலா எவ்வளவோ முயன்றும் இயலவில்லை. பல மணி நேரப் போராட்டத்திற்குப் பின், பாம்பு கொல்லப்படுகிறது. இச்செய்தியை கேட்ட வத்சலா மிகுந்த மனபாரத்துடன் அழுதார். நம் உயிருக்குத் தீங்கு விளைவிக்கும் எதையும் கண்டால் அதை ஒழிக்க நினைக்கும் பலர் மத்தியில் வத்சலா தன் உயர்ந்த குணத்தினால் அழகான தேவதையாக மிளிர்கிறார்.       

 

 

வேதாந்தம்:

                  

                   இது கதையின் தலைப்பு மட்டுமின்றி கதாநாயகனின் பெயரும் கூட. 1950-1960களில் தமிழ்நாட்டில் மொழிப் போராட்டங்கள் நிறையவே நிகழ்ந்தன. அவையாவும் இந்தி எதிர்ப்பு மற்றும் இந்தி ஒழிப்பு போராட்டங்களே. ஒரு மொழி வளர இன்னொரு மொழியின் வளர்ச்சியைத் தடுப்பது நியாயமா? இக்கேள்விக்குப் பதில் இந்த கதையில் உள்ளது. திடீரென்று எழுந்த போராட்டங்களினால் வேலையை பறிகொடுக்கிறார் ஒரு இந்தி ஆசிரியர். அதனால் அவரை நம்பியிருந்த அவரது குடும்பமும் அல்லல்படுகிறது. அந்த ஆசிரியர் நரசிமாச்சாரியருக்கு பல வழிகளில் உதவுபவர் தான் வேதாந்தம். வேதாந்தத்தின் சிறந்த பண்பானது மற்றவர் துன்பத்திலிருந்து அவர்களை காப்பாற்றுவதே. இதே குணம் நரசிமாச்சாரியரிடத்திலும் வெளிப்படுத்துகிறார் வேதாந்தம். எத்தனையோ முயற்சிகள் எடுத்தும் வீண். கடைசியில் வேதாந்தம் கையாளும் விதம் பாராட்டுதற்குரியது. யாரையும் எதையும் சமமாகப் பார்க்கும் வேதாந்தம் முடிவில் ஒரு தெளிவான தீர்மானத்திற்கு வருகிறார். அவரின் செய்கையினால் ஒரு நல்ல குடும்பம் எவாறு முன்னுக்கு வருகிறது என்பதை விளக்கும் ஒரு உன்னதமான மனிதராய் திகழ்கிறார் வேதாந்தம். முடிவில் அவர் என்ன செய்கிறார் என்பதையும் நானே சொல்ல வேண்டுமா என்ன!

 

 

முடிவுரை:

 

                   தேவதைகள் என்றாலே நம் கண்முன் தோன்றுவது அழகான உருவத்துடன் கையில் மந்திர கோலுடன் பிரகாசமான முகத்துடன் ஒரு பெண்தான். அம்மாதிரியான மனிதர்கள் தான் தேவதைகள் என்கிற கருத்தை உடைத்தெருகிறது இப்புத்தகம். தேவதை என்ற பட்டத்திற்கு உகந்தவர் யார் என்பது  மேலே கூறிய கதைகள் வெறும் சான்றுகள் தான்.  நிறையத் தேவதைகளில் தரிசனம் கிட்டியது எனக்கு இப்புத்தகத்தின் வாயிலாக. இன்னுமா தேடி கொண்டிருக்கிறீர்கள் தேவதைகளை? அப்படியென்றால் இந்த புத்தகத்தைத் தவறாமல் படியுங்கள்!    



                    -ஐஸ்வர்யா ரவீந்திரன்


Comments

Popular posts from this blog

LET'S GET A RIDE

                                                                                                                                                                                                                                           - AISHWARYA RAVINDRAN  

மனதின் சுவடுகள் - 2

 கவிதை - 1  வந்தாரை விழுங்கி  பசியாற்றிக்கொண்டேன்  வாயிற்கதவாய்...  கவிதை - 2 வழித்துணையாக வந்தவளை  வாசலிலே உதறிவிட்டேன்  வருத்தத்தில் காலணி கவிதை - 3 விரல்களின் வேகத்தால்  எழுந்தது இனிய இசை கணினியின் 'கீபோர்ட்டில்' கவிதை - 4 யாருக்கும் வளைந்து கொடுக்காமலே உயர்ந்தவன் நான் என்றது கம்பீரமான சுவர் கவிதை - 5 துளியும் கசியாத இருளில் கண்ணீருடன் மெழுகுவர்த்தி  கவிதை - 6 உனது மூட நம்பிக்கையினால் உயிர் பிரிந்தேன்  எலுமிச்சையாய்     - ஐஸ்வர்யா ரவீந்திரன்