"எனக்கு வயசாயிருச்சு", "உடம்பு ஒத்துழைக்காது", "எல்லோரும்
சிரிப்பார்கள்" - இப்படிப்பட்ட பல சமாதானங்களையும் சாக்குப்
போக்குகளையும் கேட்டிருப்போம். சில சமயம் நாமும்
இவற்றையெல்லாம் கூறி இருப்போம். இம்மாதிரி கூற காரணம்
என்னவாக இருக்கும்? சற்று சிந்திக்கலாமே...
நம்மில் பலர் குறிப்பிட்ட வயதுக்குப் பின் சிறு வேலைகளைக் கூடச்
செய்யவே கூடாது என்ற தீர்மானத்துடன் இருப்பார். இம்மாதிரி மனிதர்களைப்
பொறுத்தவரை ஏதாவது ஒரு வலுவான காரணம் இல்லாவிடில் வேலை
செய்வதை மறந்து விடுவர். சுறுசுறுப்பாக இயன்ற அளவுக்காவது
வேலை செய்தால், நம் அகமும் புறமும் என்றும் இளமையாக இருக்கும்.
நான் 12 ஆம் வகுப்பு பயிலும் போது கவனித்த விஷயம் இது.
என்னுடன் மாலை பேருந்தில் பயணிக்கும் ஒரு மூதாட்டியைப்
பற்றியது. அவர் எங்கள் பள்ளியில் ஆயா வேலை செய்து வந்தார்.
எப்பொழுதும் சிரித்த முகத்துடன் காணப்படுவார். வயது 75-80க்குள்
இருக்கும். ஆயினும் அவர் வதனத்தில் சோகத்தையோ
வருத்தத்தையோ அல்லது அலுப்பையோ நான் பார்த்ததே இல்லை.
மேலும் அவர் யாரையும் குறை கூறவும் மாட்டார். அவர் வீட்டிலிருந்து
பள்ளி வரை காலையில் தினமும் நடந்தே வருவார். சுமார் 2-3 கிலோ
மீட்டர் தூரம் இருக்கும்.
ஒருசமயம் அவரை 2-3 நாட்களாகக் காணவில்லை. என்னவென்று
விசாரித்ததில் ஒன்றும் பயனில்லை. ஒரு வாரம் கழித்து அவரை
சந்தித்தபோது விவரம் கேட்டேன். அதற்கு அவர், "சில நாட்களாக
உடல் நிலை சரியில்லாததால் மருத்துவரை அணுகினேன்.
எனக்கு இதயத்தில் கொஞ்சம் ஆபத்தான நோய் இருக்கிறதாம்.
சரியாகக் கவனிக்காததால் இந்த நிலைமைக்கு வந்துவிட்டது. மருந்து
மாத்திரைகளால் குணப்படுத்த முடியும் என்கிறார். அந்த
நம்பிக்கையில் தான் இருக்கிறேன்".
இதைக் கேட்டு எனக்குத் தூக்கி வாரிப் போட்டது. "உங்களுக்காகக்
கடவுளை வேண்டிக் கொள்கிறேன்" என்றேன். மௌனம். நாங்கள்
இருவரும் ஒரே ஸ்டாப்பில் தான் இறங்குவோம். அப்போது
அவரிடம், "இவ்வளவு பெரிய பிரச்சனையை வைத்து விட்டு ஏன்
வேலைக்கு வரீங்க? பேசாம வீட்டில் ஓய்வெடுக்கலாம் அல்லவா?"
என்று கேட்டேன். "எனக்கெதுக்குமா ஓய்வெல்லாம்? என்
குடும்பத்திற்காக தானே வேலைக்கு வரேன்... சந்தோஷமா செய்துட்டு
போறேன்" என்றார் அவருக்குச் சொந்தமான அதே புன்னகையுடன்.
வீட்டில் 2 ஆண்கள் இருந்தும் வேலைக்குச் செல்லும் இவரது
மனோதிடம் என்னை வியப்பில் ஆழ்த்தியது. ஸ்பூனைக் கூட கழுவ
முனையாத பெண்களுக்கு மத்தியில் நட்சத்திரமாகப் பிரகாசித்தார்
அந்த மூதாட்டி. உழைப்பதற்கு வயது ஒரு தடை என்ற எழுதப்படாத
விதியை உடைத்தெறிந்தார்.
- ஐஸ்வர்யா ரவீந்திரன்
Comments
Post a Comment